
nilavanigam.in
Top story
இன்று முதல் எம் சாண்ட், பி சாண்ட் மணல் விலை உயருகிறது..
வீடு கட்டுவோர் அறிய வேண்டியவை....
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் 'எம் சாண்ட்’, 'பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதியான இன்று முதல் அதிரடியாக உயர்த்தப்படுகிறது. இனி புதிய வீடுகளை கட்டுவோர் கட்டுமான செலவுக்காக கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் வரை அதிகம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு வருகிறது. புதிதாக வீடு கட்டவோ, புதிய வீடு வாங்குவதோ இனி எளிதானதாக இருக்காது என்கிற அளவிற்கு கட்டுமான பொருட்கள் விலை அடிக்கடி உயர்கிறது. இதன் காரணமாக புதிதாக வீடு கட்டுவோர் மற்றும் புதிய வீடு வாங்க ஆசைப்படுவோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான சூழலில் அடுத்த பிரச்சனை வந்துள்ளது. எம் சாண்ட்,
பி சாண்ட் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உயர்த்தப்படுகிறது.
கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், " கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமான தொழிலை நம்பி செயல்படும் கிரஷர் மற்றும் குவாரிகள் தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தமிழக அரசின் கனிமவளத் துறை ராயல்டி கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணமும் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் கட்டுமானத் துறைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய கிரஷர் மற்றும் குவாரிகளில் தயாரிக்கப்படும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் ரூ.3,000 மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. எம் சாண்ட் ரூ.4,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் ரூ.5,000 மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கனிம பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" இவ்வாறு கூறியிருந்தார்..
BNA GRAPH
Registered in BNA

covering

Post / Day



