
nilavanigam.in
HOME LOAN
சொத்தின் மதிப்பு, பணவீக்கம், வரிச் சலுகை... வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுவது லாபமா?
நம்மில் பலரின் வாழ்நாள் கனவு என்பது சொந்த வீடாகத்தான் இருக்கிறது. அவரவர் வருமானத்துக்கு ஏற்ப ஒரு கோட்டையைக் கட்டாவிட்டாலும், ஒரு சிறிய வீடாவது கட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரிய நகரங் களில் வாடகைக்குக் குடியிருக்கும் நகரவாசிகளில் பெரும்பாலானவர்கள், ஹவுஸ் ஓனர்களின் பிரச்னைகளில் இருந்து விலகி, தனக்கென ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சொந்த வீட்டுக் கனவை நனவாக்க சாமானியர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருப்பது வீட்டுக் கடன்தான். ஆனால், ஒரு தரப்பினர், கடன் வாங்கி வீடு வாங்குவது சரியா, இது தவறான முடிவாக இருக்குமோ என்ற கேள்வியையும் எழுப்புகிறார்கள்.
வீட்டுக் கடன் புத்திசாலித்தனமான முடிவு...
வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது புத்திசாலித்தனமான முடிவு மட்டுமல்ல, லாபகரமானதும்கூட. இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய பணக்காரர்கள்கூட வீட்டுக் கடன் வாங்கிதான் வீடு கட்டுகிறார்கள். அப்படி இருக்கையில் சாமானியர்கள் கடன் வாங்கி வீடு கட்டுவது ஒன்றும் தவறு இல்லை.
கடன் வாங்கி நுகர்வோர் பொருள்களை வீடு முழுக்க வாங்கி வைத்து அழகு பார்ப்பதற்குப் பதில், கடன் வாங்கி அதன் மூலம் ஒரு சொத்தை வாங்குதல் அல்லது உருவாக்குவது தவறு கிடையாது. ஏனெனில், கடன் வாங்கி நீங்கள் வீணாகச் செலவு செய்யவில்லை. மாறாக, எதிர்காலத்துக்கான ஓர் அடித்தளத்தை அமைக்கிறீர்கள். இது எதிர்காலத்தில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாகவே இருக்கும்.