
nilavanigam.in
RBI ANNOUNCEMENT
``இனி கடன் வாங்கும்போது இதைக் கட்டாயம் பாருங்க..." ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது நிறைய மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இது போன்ற மறைமுக கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது பொதுவாகவே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், மறைமுக கட்டணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது, கடன் தொகைக்கு வட்டி விகிதம் விதிக்கப்படும். இந்த வட்டித் தொகையுடன் பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் என பல்வேறு மறைமுகக் கட்டணங்களும் சேர்த்து வசூலிக்கப்படுகின்றன. மறைமுகக் கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு கடனுக்கும் வழங்கப்படும் விவர அறிக்கையில் (Key Fact Statement) கடனுக்கான பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் போன்ற விவரங்களையும் வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது வங்கிகள் மட்டுமல்லாமல் நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் கடன் ஆப்கள் போன்றவற்றுக்கும் பொருந்தும். வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன், தனிநபர் கடன் போன்ற சிறு கடன்கள் மட்டுமல்லாமல், சிறு குறு நடுத்தர தொழில் கடன்களுக்கும் இந்த விதிமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியபோது, ``தற்போதைய சூழலில் வாடிக்கையாளர்கள் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் தவிர பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன. இவை குறித்து வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதற்காக, கடனுக்கான விவர அறிக்கையில் அனைத்து விவரங்களையும் குறிப்பிடும்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
இது சிறு கடன்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கடன்களுக்கும் பொருந்தும். இதனால், கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்ட பிறகு, முடிவு எடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். ஆக, இனி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும்போது கூடுதல் கட்டணங்கள் பற்றி ஒருவர் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியும்.